கடனட்டைகளுக்கான வட்டி வீதத்தை குறைப்பது தொடர்பான தீர்மானமொன்றை வணிக வங்கிகள் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த வட்டி வீதத்தை எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து குறைக்க வணிக வங்கிகள் தீர்மானித்துள்ளன.
அதன்படி கடனட்டைகளுக்கான வட்டி வீதம் 30 சதவீதமாக குறைக்கப்பட உள்ளது.
தற்போது குறித்த வட்டி வீதமானது 34 சதவீதம் வரை காணப்படுவதாக தெரியவருகிறது.
இலங்கை மத்திய வங்கி அண்மையில் வட்டி வீதங்களை குறைத்திருந்ததுடன், வர்த்தக வங்கிகளும் அதற்கேற்ப வட்டி வீதங்களை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்திருந்தார்.
அனைத்து வங்கிகளுக்கும் எச்சரிக்கை
அரச மற்றும் வர்த்தக வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்க வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய முன்னதாக அறிவித்திருந்தார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டிருந்தார்.
மத்திய வங்கியினால் வழங்கப்படும் கடன்களுக்கான கொள்கை வட்டி வீதம் 12%ஆக குறைக்கப்பட்டுள்ளது. 16.5% வரை காணப்பட்ட கொள்கை வட்டி வீதமே தற்போது குறைக்கப்பட்டுள்ளது. இந்த கடன் வட்டி சலுகைகள் பொதுமக்களுக்கு கிடைக்கின்றதா என்பது தொடர்பில் மத்திய வங்கி தீவிர கவனம் செலுத்தியுள்ளது.
மத்திய வங்கியின் கொள்கை வட்டிவீதங்கள் குறைக்கப்பட்டுள்ளமைக்கு அமைவாக, அரச மற்றும் வர்த்தக வங்கிகள், நிதி நிறுவனங்களும் தமது வட்டி வீதங்களை குறைக்க வேண்டும். அவ்வாறு வட்டி வீதங்கள் குறைக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் அதனை ஒழுங்குபடுத்தும் நேரடி பொறுப்பு மத்திய வங்கிக்கு உண்டு. அரச மற்றும் வர்த்தக வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்கவில்லை என்றால், வங்கி முறையின் சிறப்பு நேரடி ஒழுங்குமுறையை செயல்படுத்த தயாராக இருப்பதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியின் இந்த முடிவை எந்தவித சந்தேகமும் இன்றி செயல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார். மேலும் இது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுத்தமைக்காக மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் அதன் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.