இந்தியா தங்கக் கடத்தல் மையமாக உருமாறி வருவதாக உலக தங்க கவுன்சிலை மேற்கோள்காட்டிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏனைய நாடுகளை விட இந்தியாவின் தங்க தேவை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. உலக அளவில், தங்கத்திற்கான தேவை இந்தியாவில் 20 சதவீதமாக உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
இப்போதைய நிலவரப்படி, அங்கு ஒரு ஆண்டில் 800 தொன் தங்கம் பயன்படுத்தப்படுகிறது.
தங்க இறக்குமதி
உள்நாட்டில் கிடைக்கும் தங்கத்தின் அளவு போதுமானதாக இன்மையால், வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை இறக்குமதி செய்வது ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது.
கடந்த 2019 – 2020ஆம் ஆண்டு நிலவரப்படி, 1.99 லட்சம் கோடி ரூபாய் (இந்திய) மதிப்பிலான தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. அதுவே, 2021 – 2022இல் 3.44 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது.
இந்தியாவில் உள்ள தங்கத்தில், 33 சதவீதம் கடத்தல் தங்கம் என, உலக தங்க கவுன்சில் தெரிவிக்கிறது.
குறிப்பாக விமானம் வாயிலாகவே இந்த தங்க கடத்தல் நடப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னை, மதுரை, திருச்சி, கோவை பெங்களூரு, கோழிக்கோடு, கொச்சி, திருவனந்தபுரம், பெங்களூரு, புதுடில்லி, ஹைதராபாத், புனே உட்பட நாட்டின் பெரும்பாலான பெருநகரங்களில் உள்ள விமான நிலையங்கள் வாயிலாக இந்த கடத்தல் நடந்து வருவதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவிக்கிறது.
மேற்கு ஆசிய நாடுகள் வழியாகவே இந்தியாவிற்குள் தங்கம் கடத்தி வரப்படுகிறது.