29 May, 2023

கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளைஞன் – ஒட்டுமொத்தமாக 14 பேர் கைது!

கொழும்பின் புறநகர் பகுதியான தெஹிவளையில் ஒருவரை கொலை செய்தமை, மற்றவரை காயப்படுத்தியமை தொடர்பில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் லொறி, வான் மற்றும் முச்சக்கரவண்டி என்பன காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

படோவிட்ட மலையை சேர்ந்த தில்ஷான் ரங்க குமார என்ற 27 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காவல்துறையினர் விசாரணை

தெஹிவளை பகுதியில் உள்ள ஏசி பழுதுபார்க்கும் கடையொன்றிற்கு அத்துமீறி நுழைந்த இருவர் தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான இருவரையும் லொறியில் ஏற்றி காவல் நிலையத்தில் ஒப்படைக்க கொண்டு சென்றுள்ளனர்.

எனினும் ஆபத்தான நிலையில் இருந்த இருவரையும் வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மற்றைய நபர் தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடையவர்.

14 பேர் கைது

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 14 பேரும் கிண்ணியா, நிலாவெளி, அவிசாவளை, களுத்துறை, பண்டாரகம, காலி, பேருவளை, கந்தளாய், ஹட்டன் மற்றும் ருவன்வெல்ல பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும், 19 முதல் 99 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்படவுள்ளதாகவும் சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share