நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் நாளைய தினம் (21) ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் இன்று (20) காலையில் இருந்து நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு செப்டம்பர் 16ஆம் திகதி வைரவர் சாந்தி நிறைவடைந்த பின்னரே திறந்து விடப்படும் என யாழ்ப்பாண மாநகர சபை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் ஆலய சுற்று வீதிகள் மூடப்பட்டிருக்கும் சமயங்களில் பருத்தித்துறை வீதி வழியாக வரும் வாகனங்கள் யாழ்ப்பாண மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியால் பயணித்து யாழ்ப்பாண நகரை அடைய முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை நல்லூர் கந்தசுவாமி ஆலய இரதோற்சவம் மற்றும் சப்பர திருவிழாக்களின் போது கச்சேரி நல்லூர் வீதியாலேயே பயணிக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லூர் ஆலய வெளி வீதியைச் சூழ ஆலய நிர்வாகத்தினரால் சிவப்பு, வெள்ளை வர்ணக் கொடிகளால் எல்லையிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டள்ளது.
வீதித்தடை பகுதிகளினுள் மாநகர சபையின் நீர் விநியோக வண்டி மற்றும் கழிவகற்றும் வண்டியை தவிர எக்காரணம் கொண்டும் வாகனங்கள் உட் செல்ல முடியாது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.