23 September, 2023

பிரித்தானியாவில் சட்டவிரோதமாக குடியேறும் இலங்கையர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

பிரித்தானியாவில், சட்டவிரோதமாக குடியேறும் இலங்கைப் பிரஜைகளை தடுப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸிடம் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலக பணிப்பாளர் பென் மெல்லருடன் இந்த வார தொடக்கத்தில் நடந்த சந்திப்பின் போது அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அதன்படி பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) குறித்தும் கலந்துரையாடியிருந்தனர். மேலும் பிரித்தானியாவில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டங்களை அமைச்சர் டிரன் அலஸ் பாராட்டினார்.

இந்நிலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள நான்கு பேர் தொடர்பான விடயங்களும் கலந்துரையாடலின் போது பேசப்பட்டுள்ளன.
2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் நான்கு பேரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அலஸ் விளக்கினார்.

நாட்டின் விதிகள் மற்றும் சட்டங்களை சரியான முறையில் பயன்படுத்துவது குறித்து இலங்கை பொலிஸ் அதிகாரிகளுக்கு கல்வி கற்பிப்பதற்காக பயிற்சி பட்டறை ஒன்று ஏற்பாடு செய்யப்படும் என்றும் உயர்ஸ்தானிகர் ஹல்டன் குறிப்பிட்டார்.

Share