தரமற்ற மருந்துகள் இறக்குமதி..! சந்தேகநபர்கள் கைது..

ஹியுமன் இம்யூனோகுளோபுலின் தரமற்ற தடுப்பூசிகளை கொள்வனவு செய்த சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்தவின் நடவடிக்கைகள் நீதிமன்றத்திற்கு சந்தேகத்தை ஏற்படுத்துவதாக மல்லிகாகாந்த நீதிபதி லோச்சனி அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள வைத்தியசாலைகளுக்கு தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் ஊசி மருந்துகளை கொள்வனவு செய்து விநியோகித்தமை தொடர்பான வழக்கு நேற்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.அங்கு, குறித்த மருந்தை விநியோகித்த நிறுவனத்தின் உரிமையாளரும், மருத்துவ வழங்கல் திணைக்களத்தின் பணிப்பாளருமான டொக்டர் கபில விக்கிரமநாயக்க மற்றும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சுகாதார அமைச்சின் நான்கு அதிகாரிகள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

 

அப்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சார்பில் விசாரணையின் முன்னேற்றம் குறித்து தெரிவித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம, கேள்விக்குரிய மனித இம்யூனோகுளோபுலின் ஊசியின் தரம் தொடர்பான தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆய்வு அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதாக தெரிவித்தார்.இந்தநிலையில் தரமற்ற ஹியுமன் இமியுனிகுளோபியுலின் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ததில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்தவின் நடவடிக்கை நீதிமன்றத்திற்கு சந்தேகத்திற்குரியது என மாளிகாகந்த நீதவான் நீதிபதி லோச்சனி அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.

எனவே, பொதுமக்களுக்கு தரம் குறைந்த மருந்துகளை பெற்றுக்கொடுத்தமைக்கு மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்காக இதற்கு காரணமான சகல தரப்பினரையும் பாகுபாடு இன்றி கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.அத்துடன், குறித்த விநியோகஸ்தர் மூலம் மருத்துவ விநியோக திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட மேலும் 04 வகை மருந்துகளையும் அப்புறப்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும் சந்தேகநபர்கள் ஐவரையும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.