பொலிஸாரை தாக்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர்கைது..!

மட்டக்களப்பு – கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் இளைஞர் ஒருவர் பொலிஸாரை தாக்கிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.குறித்த வழக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.இதன்போதே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன், அவரது தாயார், சகோதரி ஆகிய 3 பேரையும் எதிர்வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கொக்குவில் 2ம் குறுக்கு வீதியைச் சேர்ந்த 26 வயதுடைய நபர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் மதுபோதையில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியை தாக்கியுள்ளார் இதன் போது முச்சக்கரவண்டி சேதமடைந்ததால், உரிமையாளர் பொலிஸாரிடம் புகார் செய்துள்ளார்.

இதனையடுத்து மதுபோதையில் இருந்த இளைஞனை அவரது தாயார் மற்றும் சகோதரி தமது தோல்களில் சுமந்தவாறு பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்ற போது அங்கிருந்த பொலிஸ் உத்தியோகத்தரொருவர் கதிரையில் இருக்குமாறு தெரிவித்த நிலையில் குறித்த இளைஞன் அந்த கதிரையை தூக்கி பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொண்டதில் அவர் படுகாயமடைந்தார்.

இந்த நிலையில் பொலிஸ் நிலையத்தில் இருந்த ஏனைய பொலிஸார் குறித்த இளைஞனை மடக்கி பிடித்து கைவிலங்கிட்டு பொலிஸ் நிலைய கைதி கூட்டின் வெளிபகுதில் வைத்திருந்த நிலையில் அந்த இளைஞன் தனது தலையை கூண்டின் கதவில் அடித்ததையடுத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அதனை தடுக்க முற்பட்டுள்ளார்.இதன்போது அவரை வாயால் கடித்து சீருடையை கிழித்த நிலையில் அவரை காப்பாற்ற சென்ற இரு பொலிஸார் மீது இளைஞனுடன் அவரது தாயார் சகோதரிகள் இணைந்து தாக்குதல் மேற்கொண்டதில் காயமடைந்த 4 பொலிஸார் மற்றும் தாக்குதல் நடத்திய இளைஞன் உட்பட 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இச்சம்பவத்தில், இளைஞன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவர்களை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.இதேவேளை கைது செய்யப்பட இளைஞன் பல்வேறு குற்றச்செயல்கள் மற்றும் வீதியில் செல்வோர் மீது தாக்குதல் நடத்திய சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது