வெளிநாட்டில் இருந்து வந்த உத்தரவின் பெயரில் கொழும்பில் கொல்லப்பட்ட நபர்..!

கொழும்பு கெசல்வத்தை பகுதியில் நபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி நிஹால் தல்துவா நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பல தகவல்களை வெளியிட்டார்.இரண்டு பாதாள உலகக் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.வெளிநாட்டில் இருந்து வந்த உத்தரவின் பேரில் இந்த கொலை நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.கெசல்வத்தை பகுதியை சேர்ந்த 48 வயதுடைய மொஹமட் சார்க் இனாமுல் ஹசன் என்பவர் நேற்று முன்தினம் இரவு கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பாதாள உலகக் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.சந்தேகநபர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்ற போதிலும், அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொல்லப்பட்ட நபர் ஐஸ் போதைப்பொருளுக்கு அதிக அடிமையாக இருந்ததாகவும், அவர் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் எனவும் கூறப்படுகிறது.

குறித்த நபர் தனது வீட்டில் இருந்ததாகவும், மேலும் ஒருவருடன் விஷ போதை பொருளை உட்கொண்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதன்போது மனைவி மற்றும் குழந்தை வீட்டில் இல்லை எனவும், முச்சக்கர வண்டியில் வந்த ஐவர் இந்த கொலையை செய்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.கொலையை செய்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், கொலையை செய்த வாள் மற்றும் முச்சக்கரவண்டியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.