திருகோணமலையில் உள்ளூர் துப்பாக்கி மற்றும் வெடி பொருட்களுடன் ஒருவர் கைது..!!

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ஹக்கபட்டஸ் வெடி பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் திருகோணமலை – புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணிபுர பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.குறித்த சந்தேக நபர் நேற்று (06.2.2024) விசேட பொலிஸ் அதிரடி படையினரின் சுற்றிவளைப்பின் போது கைதாகியுள்ளார்.இவ்வாறு கைது செய்யப்பட்டவர் புல்மோட்டை டி-10 மணிபுர பகுதியைச் சேர்ந்த புஞ்சிபண்டாகே இந்திக சுகத் பண்டார (31வயது) எனவும் தெரியவருகிறது.

புல்மோட்டை பொலிஸ் விசேட பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் எட்டு ஹக்கபட்டஸ் என்று அழைக்கப்படும் வாய் வெடிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.பின்னர் சந்தேகநபர் புல்மோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் புல்மோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.