இந்த தகுதி உங்ககிட்ட இருக்கா? ரூ.20 ஆயிரம் வரையில் அரசு உதவித் தொகை!

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் உயர்கல்வித் துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஏழை மாணவ, மாணவியர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டுக்கான உதவித்தொகைக்காக விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக, மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர்.

மாணவர்கள் தங்களுடைய மேல்நிலைப் படிப்பில் குறைந்தபட்சம் 80 சதவிகித மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருத்தல் அவசியம். பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.

கல்லூரியில் மூன்றாண்டு பட்டப்படிப்புகள் படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகையாக வழங்கப்படும். முதுநிலைப் படிப்பு பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 20 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படும்.

ஐந்தாண்டு ஒருங்கிணைந்த முதுநிலைப் படிப்புகள் படிக்கும் மாணவர்களாக இருந்தால், முதல் மூன்று ஆண்டுகளுக்கு 10 ஆயிரம் ரூபாயும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு 20 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.

தற்போது, மொத்தம் 82 ஆயிரம் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதில் மாணவர்கள், மாணவிகள் என 41 ஆயிரம் மாணவர்களுக்கும், 41 ஆயிரம் மாணவிகளுக்கும் என சரிசமமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மேல்நிலைப்படிப்பில் அவர்களின் பாடப்பிரிவுக்கு ஏற்றவாறு உதவித்தொகை மாறுபடும். அறிவியல், வணிகம், கலை ஆகிய பிரிவுகளுக்கு 3:2:1 என்ற விகிதாச்சாரத்தில் உதவித்தொகை வழங்கப்படும்.

எஸ்.சி. பிரிவினருக்கு 15 சதவிகிதம், எஸ்.டி, பிரிவினருக்கு 7.5 சதவிகிதம், ஓபிசி பிரிவினருக்கு 27 சதவிகிதம், மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவிகிதம் என்ற அளவில் உதவித்தொகையில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படுகிறது. இதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு உண்டு.

மத்திய அரசின் இந்த உதவித்தொகை பெறுவதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள மாணவர்கள் https://scholarships.gov.in/ என்னும் இணையதளத்தில் விண்ணப்பத்தினைப் பெற்று அதனை பூர்த்தி செய்து வரும் அக்டோபர் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

https://scholarships.gov.in/ தளத்தில் மாணவர்கள் புதிதாக தங்களது சுயவிவரங்களை அளித்து பதிவு செய்ய வேண்டும். பின்பு, ஆன்லைனில் விண்ணப்பதிவு சரிபார்க்கப்படும். உதவித்தொகை பெறுவதற்கான தகுதிகள் மாணவர்களிடத்தில் இருக்கும் பட்சத்திலேயே, அவர்களின் வங்கிக்கணக்கிற்கு நேரடியாக உதவித்தொகை செலுத்தப்படும்.

இந்த உதவித் தொகை குறித்தான மேலும் விபரங்களை அறிய விரும்புவோர் https://scholarships.gov.in/public/schemeGuidelines/Guidelines_DOHE_CSSS.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்து காணவும்.