மிஸ் யுனிவர்ஸ் 2019 பட்டம் பெற்ற தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சோசிபினி பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்..அழகு என்பது வெளித்தோற்றத்தைச் சார்ந்தது அல்ல

அமெரிக்காவில் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் 2019 அழகிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சோசிபினி துன்சி மிஸ் யுனிவர்ஸ் 2019 வெற்றியாளர் பட்டத்தை தனக்குச் சொந்தமாக்கியுள்ளார். இவர் கறுப்பின பெண். கருப்பாக இருக்கும் பெண்களை அழகற்றவர்களாகவும், காமெடியாகவும் பார்க்கிறது இந்த பொதுசமூகம். சினிமாவிலும் அவ்வாறுதான் எடுக்கப்படுகிறது. அழகு என்பது வெளித்தோற்றத்தைச் சார்ந்தது அல்ல என்பது இங்குப் பலருக்கு புரிவதேயில்லை.

அழகு என்பது இங்கு அனைவரும் வெளித்தோற்றத்தை மட்டும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அழகிகள் என்றால் பளபளப்பான வெண்மை நிறைந்த சருமம் என்றுதான் கூறுவார்கள். இன்று உலகமே வியந்து நோக்கும் வகையில் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கறுப்பின பெண் ஒருவர் பெற்றிருக்கிறார் என்பது பெருமைக்குரிய விஷயம்.

அமெரிக்காவின் அட்லாண்டாவில் இருக்கும் டைலர் பெர்ரி ஸ்டுடியஸில் மிஸ் யுனிவர்ஸ் 2019 அழகிப் போட்டி நடைபெற்றது. மிஸ் யுனிவர்ஸ் 2019 அழகு போட்டியின் கடைசி போட்டி நேற்று நடைபெற்றது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 90 போட்டியாளர்கள் இதில் கலந்து கொண்டு, தங்கள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி தங்கள் திறமையைக் காட்டினர். இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சோசிபினி துன்சி “மிஸ் யுனிவர்ஸ் 2019” பட்டம் வென்றார். கடந்த ஆண்டு பட்டம் வென்ற கட்ரியோனா கிரே, சோசிபினி துன்சிக்கு மகுடம் சூட்டி மகிழ்ந்தார்.

26 வயதான சோசிபினி துன்சி, தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற மூன்றாவது பெண்மணி ஆவார். 2011 ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் மகுடம் சூட்டப்பட்ட முதல் முதல் கருப்பு பெண் லீலா லோபஸ் ஆவார். இரு முறை மிஸ் தென் ஆப்பிரிக்க போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறவில்லை. ஆனால், தற்போது மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் கலந்து கொண்டு வெற்றிப் பெற்றுள்ளார்.

சோசிபினி துன்சி ஒரு தீவிர சமூக ஆர்வலர். பா லி ன அடிப்படையிலான வ ன் மு றைக்கு எதிரான பல போராட்டத்தில் கலந்து கொண்டு சமூகத்திற்காகக் குரல் கொடுத்து வருகிறார். மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்று அவர் பெற்ற புகழைவிட சமூகத்திற்கு அவர் ஆற்றிய பல சேவைகளில் அவர் புகழ் அதிகம்.

சோசிபினி துன்சி தென் ஆப்பிரிக்காவில் உள்ல அசோலோவில் பிறந்தார். கிழக்கு கேப் பகுதிக்கு அருகிலுள்ள சித்வதேனி கிராமத்தில் வளர்ந்தார். பின்னர், அங்கிருந்து கேப் நகரத்துக்குக் குடிபெயர்ந்த சோசிபினி கேப் தீபகற்ப தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கல்லூரி பயின்றார். அங்கு கடந்த ஆண்டு பொது உறவுகள் மற்றும் பட மேலாண்மை ஆகியவற்றில் இளங்கலை பட்டம் பெற்றார்.

2017 ஆம் ஆண்டு தன்னுடைய போட்டி வாழ்க்கையைத் தொடங்கினார் சோசிபினி. மிஸ் தென்னாப்பிரிக்கா 2017ஆம் ஆண்டு நடந்தபோது அரையிறுதிப் போட்டிகளில் 26 பேரில் ஒருவராக சோசிபினி துன்சி தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கினார். பின்னர் அவர் வென்ற மிஸ் தென்னாப்பிரிக்கா 2019 போட்டியில் பங்கேற்கப் போட்டிக்குத் திரும்பினார்.

26 வயதான சோசிபினி ஒரு பெருமைமிக்க வழக்கறிஞர். பெண்கள் முதலில் தங்களை நேசிக்க வேண்டும் என்றும் பெண்களிடையே இயற்கை அழகையும் அவர் ஊக்குவிக்கிறார். பாலின நிலைப்பாடுகளைச் சுற்றியுள்ள கட்டுக்கதைகளை மாற்றுவதற்காக சமூக ஊடகங்களில் பல பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்.

மிஸ் யுனிவர்ஸ் அழகிப்போட்டியில் இறுதிச்சுற்றுக்குத் தேர்வாகியிருந்த 7 பேரிடமும் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. இன்றைய காலகட்டத்தில் இளம் பெண்களுக்கு நாம் கற்றுக் கொடுக்க வேண்டிய முக்கியமான விஷயம் எது என்பது தான் கேள்வில். இதற்கு அனைவரும் ஒவ்வொரு பதிலளித்தனர். ஆனால், சோசிபினி அளித்த பதில் தான் அனைவரையும் கவர்ந்து ஈர்த்தது.

இளம் பெண்களுக்கு நாம் கற்றுக் கொடுக்க வேண்டிய முக்கிய விஷயம் தலைமைப் பண்பு எனத் தெரிவித்தார் சோசிபினி. மேலும் சமூகத்தில் பெண்கள் தனக்கென தனி இடத்தை உருவாக்கிக் கொண்டு தங்களை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அதுதான் எல்லாவற்றை விடவும் முக்கியமானது எனத் தெரிவித்தார். சோசிபினி துன்சியின் இந்த பதில் அனைவராலும் பாராட்டப்பட்டது.

மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்ற பிறகு பேசிய சோசிபினி, “என்னை போன்ற நிறத்தையும், முடியையும் உடைய பெண்கள் அனைவருக்கும் இதைச் சமர்ப்பிக்கிறேன். எங்களின் இந்த நிறமும், தோற்றமும் அழகு என்று கருதப்படாத உலகத்தில் நான் வளர்ந்தேன். ஆனால், இம்மாதிரியான எண்ணங்கள் நிறுத்தப்படுவதற்கான நேரம் இது என்று நினைக்கிறேன். இதோ, தற்போது என்னைக் கண்டு என்னைப் போன்ற பெண்கள் பெருமைப்படுவார்கள்.

இந்த நொடியிலிருந்து என்னைப் போன்று பிறந்த சிறுமிகள் அனைவரும் என்னை இந்நிலையில் கண்டு, தங்களின் கனவுகளை நம்பி உழைக்கட்டும். என் முகத்தில் அவர்களின் முகத்தை பார்க்கட்டும். இப்போது நான் பெருமையுடன் சொல்வேன் என் பெயர் சோசிபினி துன்சி; நான் மிஸ் யூனிவர்ஸ் 2019.” என்று பெருமையாகக் கூறினார். அழகு என்பது தோற்றத்தில் இல்லை எண்ணத்தில் உள்ளது என்று இவ்வுலகிற்கு நிரூபித்துள்ளார் சோசிபினி துன்சி.