நொறுக்குத்தீனி, ஒரே லுக்கில் கிக் ஏற்றும் காந்த கண்கள் யாருக்கு அமையும் தெரியுமா?

ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரனும் சந்திரனும் வலுவாக இருக்க வேண்டும். சந்திரன்தான் முகத் தோற்றம், முகப்பொலிவு, அந்த உருண்டை முகம், அந்த முகத்திற்குத் தகுந்த மாதிரி மூக்கு, கண், காது எல்லாம் செதுக்கி வைத்திருக்கிறது என்று சொல்வார்களே, அதெல்லாம் சந்திரன்தான்.

ஒருவரின் ஜாதகத்தில் சுக்ரன் நன்றாக இருக்கிறாரென்றால், அவர்களது கண்கள் காந்தமாகவும், கனிவானதாகவும் இருக்கும். அந்த மாதிரி முக அமைப்பும் வடிவமும் கொண்டவர்களைப் பார்த்தாலே கூப்பிட்டு பேசத்தோன்றும். ஒருவரின் முக வடிவம் மட்டுமல்லாது எந்த ராசிக்காரர்கள் எப்படி சாப்பிடுவார்கள், அவர்களின் திறமை எப்படி இருக்கும் என்று ஒருவரின் ராசி நட்சத்திரத்தை வைத்து கணித்து விட முடியும்.

அசுர குருவான சுக்கிரன் சுகபோகங்களின் அதிபதி. திருமண பாக்யத்துக்கு அதிகாரம் வகிப்பவர். களத்திரகாரகன், இன்பங்களின் ஊற்றாக இருப்பவர். ஒருவருக்கு பொன், பொருள், அழகமைந்த மனைவி, சுகமான வாழ்க்கை, உயர் பதவி, கலை, வாகன யோகம் போன்றவைகளை சிறப்புடன் வாழும் யோகத்தை தருவது சுக்கிரன்தான். ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் ஆட்சி, உச்சம் பெற்றிருந்தால் கலாரசனை என்கின்ற அற்புத உணர்வு அளிப்பவர், காதல் கொண்டு சுகமடையும் தகுதி, சிற்றின்பம், திருமணம் முதலான நன்மைகளை ஆணுக்கு அளிப்பவர். பெண்களுக்கு நளினத் தன்மையையும் அழகான தோற்றம், கவர்ச்சி, வீரியசக்தி, அறிவாற்றல், அழகான கணவனையும் சுக போகங்களில் திளைக்கும் ஆற்றலையும் வழங்குவார்.

ஆணின் ஜாதகத்தில் ஏழாம் இடம் என்பது மனைவியின் அழகு, யோகம் வசதி வாய்ப்புகள் பற்றி குறிக்கக் கூடியதாகும். ஏழாம் அதிபதி, ஏழில் உள்ள கிரகம், களத்திரக்காரகன் சுக்கிரன் இவர்கள் மூவரும் ஆட்சி, உச்சம், நட்பு வீட்டில் இருந்து, இவர்கள் இருக்கும் இராசிக்கு அதிபதியும் உச்சம், நட்பு வீட்டில் இருந்து, இவர்கள் 2,11,4,5,7,10,9 போன்ற இடங்களில் சுபகிரங்களின் பார்வை பெற அழகான மனைவி அமையப் பெறும் யோகம் கிடைக்கும்.

ஜாதகத்தில் சுக்ரன் நன்றாக இருந்தாரென்றால் அவரின் கண்களில் ஒளி இருக்கும். அவர்களெல்லாம் பெரிதாக ஒன்றும் நம்மிடம் பேச வேண்டும் என்று அவசியமே இருக்காது. சும்மா அப்படிப் பார்த்து கண் சிமிட்டினாலே போதும் எதிராளிகள் விழுந்து விடுவார்கள் அந்த அளவிற்கு கவரும் முக அமைப்பும் கண்களும் கொண்டவர்களாக இருப்பார்கள்.

அங்க லட்சணங்கள் ஒவ்வொரு நட்சத்திர ராசிக்கும் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்கள் அதுபோலத்தான் இருப்பார்கள். லக்னாதிபதி, உதாரணத்திற்கு மேஷ லக்னம் என்றால் உயரம், குண்டாகவும் இல்லாமல் ஒல்லியாகவும் இல்லாமல் உயரத்திற்கு ஏற்ற சதைப்பிடிப்புடன் இருப்பார்கள். ரிஷப ராசிக்காரர்கள் என்றால் சராசரி உயரமாகவும் அதற்கும் மேலாக இருப்பார்கள்.

மிதுனம், கன்னி புதனின் வீடுகள். இவர்களுக்கு மூக்கின் நுனி கொஞ்சம் உருண்டையாக இருக்கும். குறிப்பாக கன்னி ராசிக்காரர்களுக்கு மிளகாய் மூக்கு இருக்கும். துலாம், சிம்மம், மகரம் ராசிக்கார்களுக்கு மூக்கு நீளமாக இருக்கும். தனுசு, மீனம் ராசிக்காரர்களுக்கு மடித்த மூக்காக அதாவது பெருமாள் மூக்கு என்று சொல்வார்கள் அந்த மாதிரி இருக்கும்.

சாமுத்திரிகா லட்சணத்தில் பிரதானம் நாசி, கண்கள், நெற்றி அமைப்பு. நெற்றியில் இருக்கும் கோடுகளையெல்லாம் வைத்துச் சில விஷயங்களைச் சொல்லிவிடலாம். சனி லக்னத்தையோ, ராசியையோ பார்க்கிறதென்றால் கோடுகள் நெற்றியில் வர ஆரம்பித்துவிடும். புதன் ஒருவருக்கு வலுவாக இருந்தால் மெல்லிய மற்றும் நீளமான விரல்களாக இருக்கும். அவருடைய கையைப் பார்க்கும் போதே, அவர் ஜாதகத்தில் புதன் உச்சமாக இருக்கிறார் என்று சொல்லிவிடலாம்.

ஜாதகத்தில் சந்திரன், சுக்கிரன் ஆகிய இரண்டும் நன்றாக இருந்தால், அவர் வாழ்வில் நல்ல நிலைக்கு எளிதாக வந்துவிட முடியும். சந்திரன் மனோகாரகன் என்பதால், முடிவெடுக்கும் திறமையை இவரே நிர்ணயிக்கிறார். எண்ணத்தைக் கொடுப்பவன் சந்திரன். மனதில் நல்ல விதைகளை விதைக்கக் கூடியவன் சந்திரன். அதனைச் செயல்படுத்தக் கூடியவன் சுக்கிரன். எண்ணம் நல்லதாக இருந்தால் நல்லவையே கிடைக்கும்.

மேஷம், ரிஷப ராசிக்காரர்கள் அசை போடுவதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு இயல்பாகவே இரைப்பை வலுவானதாக இருக்கும். செரிமானத்துக்கு உதவும் நீர் சுரப்பிகளும் அதிகமாகச் சுரப்பதால் இவர்கள் நொறுக்குத் தீனி சாப்பிடுவதில் விருப்பமாக இருப்பார்கள். மேஷம், ரிஷப ராசிக்காரர்கள் ஆவியில் வேக வைக்கும் உணவு வகைகளில் கவனம் செலுத்துவார்கள்.

மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் போஜனப் பிரியர்களாக இருப்பார்கள். ருசியாக சாப்பிடுவதை இவர்கள் விரும்புவர் அதே போல இவர்கள் எண்ணெய்யில் பொறித்த உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள்.

மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் சாப்பிடுவதை அதிகம் விரும்ப மாட்டார்கள். பசி நேரத்தில் கூட வயிற்றுக்கும், உடல் நலத்திற்கும் ஏற்ற உணவு வகைகளை மட்டுமே சாப்பிடுவர். கடகம், மீனம் ஆகிய ராசிகளைச் சேர்ந்தவர்கள் தயிர், மோர் மற்றும் அவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளை விரும்பிச் சாப்பிடுவர்.