30 May, 2023

இவ்வளவு பெரிய மோசடியா? கொழும்பிற்கு பயணம் செய்பவர்கள் அவதானம் !

கொழும்பில் பொது மக்களை ஏமாற்றும் மோசடி விற்பனை இடம்பெற்று வருவதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்..

பண்டிகைக் காலங்களில் பொருட்களை கொள்வனவு செய்ய பல்வேறு பகுதிகளில் இருந்து புறக்கோட்டைக்கு பெருமளவு மக்கள் வருகை தருகின்றனர். இவர்களை ஏமாற்றி, இரத்தின கல் என கூறி கைக்குட்டையில் சுற்றப்பட்ட கொங்கிரீட் கற்களை விற்பனை செய்யும் மோசடி ஒன்று இடம்பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.


இது தொடர்பில் நேற்று கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரியவிடம் பொலிஸார் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

இது குறித்து தங்களுக்கு ஏற்கனவே பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், முறைப்பாடு செய்தவர்கள் காது மற்றும் கழுத்தில் அணிந்திருந்த தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தை கொடுத்து மோசடி செய்பவர்களிடம் சிக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

அப்துல் ஹெருவான் என்ற நபர் செய்த முறைப்பாட்டிற்கமைய, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இந்த உண்மைகள் தெரியவந்துள்ளது.

தனது மனைவியின் காதணிகள் மற்றும் தங்க நகைகளை கொடுத்து இந்த மோசடியில் சிக்கியுள்ளதாகவும் முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

கைக்குட்டையால் மூடப்பட்ட இந்த கொங்கிரீட் கல்லை முதலில் காட்டாத மோசடியாளர்கள் வாடிக்கையாளரின் நம்பிக்கையை ஏற்படுத்தி பணத்தை பெற்றுக் கொண்டு தப்பியோடியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பல்வேறு பகுதிகளில் இருந்து வருபவர்கள் இந்த மோசடியில் சிக்கியுள்ளதாக தெரிவித்து சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்