31 March, 2023

திருமண போட்டோசூட்டால் ஏற்பட்ட விபரீதம்..!

tamil cinema : கேரளாவில் செல்பி எடுக்க முயன்ற போது புதுமாப்பிள்ளை ஆற்றில் தவறி விழுந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் மாநிலங்களில் திருமணத்துக்கு முன்,பின் எடுக்கப்படும் போட்டோ ஷூட் கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அண்டை மாநிலமான கேரளாவில் இது நீண்ட காலமாக வழக்கத்தில் இருக்கும் நிலையில் அங்கு எடுக்கப்படும் போட்டோ ஷூட் பலரின் பேவரைட்டாகவும் இருந்து வருகிறது.

இதனிடையே கோழிக்கோடு மாவட்டம் பலேரியைச் சேர்ந்த ரெஜிலால் என்ற இளைஞரும், கனிகா என்ற பெண்ணும் கடந்த மார்ச் 14 ஆம் தேதி திருமணம் செய்துக் கொண்டனர். இதற்கிடையில் ஜானகிக்காடு அருகேயுள்ள குட்டியடி ஆற்று பகுதிக்கு  புது தம்பதி இருவரும் தங்களது தந்தைகள் இருவருடன் சுற்றுலா சென்றுள்ளனர்.

அப்போது அங்கு  திருமணத்துக்குப் பிந்தைய போட்டோ ஷூட் எடுக்கப்பட்டது.  நெருக்கமாக பல போஸ்களில் கணவன் – மனைவி இருவரும் புகைப்படம் எடுத்துவிட்டு அங்குள்ள இயற்கை அழகை கண்டு மகிழ்ந்து செல்பி எடுத்துக்கொண்டிருந்தனர்.

இந்த சூழலில் ஆற்றின் ஓரம் இருந்த பாறையின் மீது ஏறி நின்று இருவரும் புகைப்படம் எடுத்தபோது கால் வழுக்கி முதலில் கனிகா ஆற்றில் விழ, அவரைக் காப்பாற்ற சென்ற ரெஜிலாலும் ஆற்றில் மூழ்கியுனர். கனிகாவின் தந்தையும் மாமாவும் அவர்களை மீட்க முயற்சித்தும் பயனில்லாத நிலையில் தக்க சமயத்தில் அங்கு வந்த டிப்பர் லாரி டிரைவர் ஆற்றில் குதித்து கனிகாவை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்துள்ளார்.

ஆனால் ரெஜிலாலை ஆற்று நீர் அடித்து சென்றதைக் கண்ட கனிகா அதிர்ச்சியில் உறைந்துள்ளார். அவருக்கு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பெருவண்ணாமுழி காவல் துறையினர் ஆற்றின் பல பகுதிகளில் ஆழமான குழிகள் இருப்பது சுற்றுலா பயணிகளுக்கு தெரியவில்லை என்பதால் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளதாக கூறியுள்ளனர்.

Share