இந்திய வம்சாவளியினரான மேகா தாக்கூர், 930,000 ரசிகர்களைக் கொண்ட டிக்டாக் பிரபலம் ஆவார்.
ஒருவர் தன்னுடைய தோற்றத்தைக் குறித்து கவலைப்படக்கூடாது, எப்படி இருந்தாலும் தன்னம்பிக்கையுடன் வாழவேண்டும் என பல்லாயிரம் பெண்களுக்கு தன்னம்பிக்கை அளித்த மேகா திடீரென உயிரிழந்ததாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளார்கள்.
அவரது உயிரிழப்புக்கான காரணத்தை அவர்கள் வெளியிடாவிட்டாலும், ஒன்ராறியோவில் நிகழ்ந்த ஒரு கார் விபத்தில் அவர் உயிரிழந்ததாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேகாவுக்கு ஒரு வயது இருக்கும்போது, அவரது குடும்பம் இந்தியாவின் மத்தியப் பிரதேசத்திலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்துள்ளது.
மேகா, கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில்தான் படித்திருக்கிறார், வளர்ந்திருக்கிறார். பள்ளிப்பருவம் அவருக்கு மிகவும் கடினமாக இருந்திருக்கிறது. சக பள்ளி மாணவ மாணவியர் அவருக்கு தொந்தரவு கொடுத்திருக்கிறார்கள், அவரை வம்புக்கிழுத்திருக்கிறார்கள்.
அப்போது மிகவும் ஒல்லியாக இருந்திருக்கிறார் மேகா. ஒல்லியாக இருப்பது அழகில்லை என கருதப்பட்ட காலகட்டத்தில், அதையெல்லாம் எதிர்கொண்டு, தன் உடலை நேசிக்கத் துவங்கி, பின்னர் பல பெண்களுக்கு ஒரு முன்னுதாரணமாக மாறியுள்ளார் மேகா.
இந்நிலையில், திடீரென அவர் உயிரிழந்ததால், அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்கள்.