கடந்த 2015ம் ஆண்டு ‘நானும் ரவுடிதான்’ படத்தில் நயன்தாரா நடித்தார். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார்.
இந்த படத்தின் படப்பிடிப்பில்தான் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. கடந்த 7 வருடமாக காதலித்து வந்த இவர்கள், லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து வந்தனர். இந்த ஆண்டு ஜூன் 9ம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் திருமணம் செய்துகொண்டனர்.
திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில் திடீரென கடந்த 9ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை, தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்திருப்பதாக விக்னேஷ் சிவன் டிவிட்டரில் தெரிவித்தார்.
இந்த தகவல் ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இது தொடர்பாக விசாரித்ததில், வாடகை தாய் மூலம் நயன்தாரா குழந்தை பெற்றிருப்பது தெரிய வந்தது.
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற விக்னேஷ் – நயன்தாரா தம்பதி
அப்படியென்றால் திருமணத்துக்கு முன்பே கடந்த ஆண்டே, நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதற்கான அனைத்து நடைமுறைகளையும் முடித்திருக்கிறார்கள்.
அதற்கு பிறகுதான் அவர்கள் திருமணமே செய்திருக்கிறார்கள். நயன்தாரா, விக்னேஷ் சிவனின் இந்த செயலுக்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.
மருத்துவ ரீதியாக குழந்தை பெற முடியாதவர்கள்தான் வாடகை தாய் மூலம் குழந்தை பெறலாம் என வாடகை தாய் சட்டம் சொல்கிறது.
ஆனால் அந்த சட்டத்தை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காற்றில் பறக்க விட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், நயன்தாரா இப்போது அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.
அத்துடன் ஷாருக்கான் ஜோடியாகவும் ‘ஜவான்’ படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகம் ஆகிறார். தொடர்ந்து அவருக்கு பாலிவுட்டில் வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.
இதனால் இந்த சமயத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாமல், பணம், புகழுக்காக வாடகை தாயை நயன்தாரா நாடியிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதியையும் வாடகை தாய் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்தையும் விசாரிக்க தமிழக அரசு சார்பில் 4 அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணியாளர்கள் இயக்கக அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். இவர்களின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு பிறகு அதிகாரிகள் கூறும்போது, ‘நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதி, வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றதில் விதிமீறல் நடந்துள்ளதா என விசாரிக்க உள்ளோம். இது தொடர்பாக தம்பதியிடம் முறையாக விசாரணை நடத்தப்படும். அதன் பிறகே எதையும் கூற முடியும்’ என்றனர்.
வாடகை தாய் ஒழுங்குமுறை சட்டத்தின்படி சட்டவிரோதமாகவோ, வர்த்தக நோக்கிலோ குழந்தை பெற்றால், அதில் தொடர்புடையவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை மற்றும் ரூ. 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
ஒருவேளை நயன்தாரா இந்த விவகாரத்தில் விதிமுறைகளை மீறியிருந்தால் அவருக்கும் விக்னேஷ் சிவனுக்கும் சம்பந்தப்பட்ட மருத்துவமனை டாக்டர்களுக்கும் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம் என சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.